×

தேனி நகர் குடிநீர் தேவைக்காக பனசலாற்று குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுமா?

*பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தேனி : தேனி நகர் மக்களின் குடிநீர் தேவையை முழுமையாக நிறைவேற்ற அல்லிநகரம் அருகே வீரப்ப அய்யனார் கோயில் பகுதியில் உள்ள பனசலாற்று குடிநீர் திட்டத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.தேனி நகரில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. 27 ஆயிரத்து 621 வீடுகள், கடைகள் உள்ளன. தேனியில் மொத்தம் 1 லட்சத்து 18 ஆயிரத்து 360 பேர் வசித்து வருகின்றனர்.

இவர்கள் தவிர தேனிக்கு நாள்தோறும் பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிய தேனிக்கு வந்து செல்பவர்கள் , தேனியில் உள்ள பல்வேறு அரசுத் துறை அலுவலகங்களுக்கு பணிக்கு வந்துசெல்வோர், அலுவல் காரணமாக அலுவலகங்களுக்கு வந்து செல்லும் பொதுமக்கள் என தேனி நகருக்கு நாள்தோறும் சுமார் 5 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். தேனி நகரில் குடியிருப்போர் மற்றும் தேனி நகருக்கு பல்வேறு காரணங்களுக்காக வெளியூர்களில் இருந்து வந்து செல்வோர் உள்ளிட்டோருக்கு குடிநீர் வழங்கும் பணியை தேனி நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதன்படி, தேனிக்கு குடிநீர் தேவையானது ஒருநாளைக்கு சுமார் 15 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது.

தேனி நகருக்கான குடிநீர் தேவைக்காக ஆரம்பகாலத்தில் தேனிஅல்லிநகரம் அருகே வீரப்ப அய்யனார் கோயில் பகுதியில் உள்ள பனசலாறு குடிநீர் திட்டம், பழனிசெட்டிபட்டி முல்லையாற்று குடிநீர் திட்டம், அரப்படித்தேவன்பட்டி வைகையாறு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இக்குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர்போதிய அளவில் கிடைக்காமல் குடிநீர் வாரத்திற்கு ஒருமுறை விநியோகிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து வைகை அணைக்கு கீழ் பகுதியில் உறைகிணறுகள் அமைத்து அங்கிருந்து தண்ணீரை வைகை அணை அருகே சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தம் செய்து, அங்கிருந்து சுமார் 16 கிமீ தூரம் தேனி நகருக்கு கொண்டு வந்து குடிநீர் பகிர்மான குழாய்கள் மூலம் வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதன்படி, தேனி நகரில் தற்போது 15 ஆயிரத்து 167 வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் நாள்தோறும் வைகை அணையில் இருந்து 13 மில்லியன் லிட்டர் குடிநீரும், பழனிசெட்டிபட்டி முல்லையாற்றில் இருந்து 1 மில்லியன் லிட்டர் குடிநீரும், அரப்படித்தேவன்பட்டி வைகையாற்று திட்டத்தில் இருந்து நாள்தோறும் 0.50 மில்லியன் லிட்டர் குடிநீரும் பெறப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 135 லிட்டர் குடிநீர் என்ற அடிப்படையில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அதேசமயம், வீரப்ப அய்யனார் கோயில் பகுதியில் உள்ள பனசலாற்று குடிநீர்திட்டத்தின் மூலம் குடிநீர் பெற்று விநியோகம் செய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதில் வைகை அணையில் இருந்து தினசரி 13 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறப்படும் நிலையில், அங்கிருந்து தண்ணீர் சப்ளை செய்யும் போது, மின்தடை உள்ளிட்ட தொழில் நுட்பக் கோளாறு ஏற்படும் போது தேனி நகரில் குடிநீர் விநியோகம் செய்வதில் சிரமம் ஏற்படும் நிலை உள்ளது.

ஆரம்ப காலத்தில் தேனி நகரில் 1 வது வார்டு முதல் 13வது வார்டு வரையிலான பொம்மையக்கவுண்டன்பட்டி முதல் அல்லிநகரம் வரை உள்ள அனைத்து பகுதிக்கும் பனசலாற்று குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது வைகை குடிநீர் திட்டம் வந்தபிறகு, இந்த தண்ணீர் எடுப்பது நின்று போனதால் குடிநீர் வினியோகம் செய்வதில் பிரச்சனை ஏற்படும்போது, பனசலாற்று குடிநீர் திட்டத்தை செயல்படுத்தலாமே என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இதுகுறித்து தேனி அல்லிநகரம் நகர்மன்ற 5வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணபிரபா கூறும்போது, அல்லிநகரத்தில் உள்ள 1வது வார்டு முதல் 13 வது வார்டு வரையுள்ள மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக வீரப்பஅய்யனார் கோவில் அபிவிருத்தி குடிநீர் திட்டம் நகராட்சி நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்டது. இதற்காக வீரப்ப அய்யனார்கோயில் அருகே உள்ள பனசலாற்றில் தடுப்பணை கட்டி, அதனருகே உறைகிணறு அமைத்து அங்கிருந்து தண்ணீர் பெறப்பட்டு, இக்குடிநீர் அங்கிருந்து தேனி நகராட்சிக்குட்பட்ட பொம்மையக்கவுண்டன்பட்டியில் மேல்நிலைத்தொட்டியில் நிரப்பி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுது. தற்போது இக்குடிநீர் எடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

மிகவும் தாதுசத்து மற்றும் இரும்புச் சத்து நிறைந்த தண்ணீரான பனசலாற்று குடிநீரை பழையபடி எடுத்து 1 வது வார்டு முதல் 10 வார்டுகளுக்காவது விநியோகிக்க வேண்டும், என்றார்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, தேனி நகராட்சி மக்களுக்கு தேவையான குடிநீர் தற்போது வைகை அணையின் கீழ் பகுதியில் இருந்தும், அரப்படித்தேவன்பட்டி, பழனிசெட்டிபட்டி பகுதிகளில் இருந்து பெறப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

வீரப்ப அய்யனார் கோயில் பகுதியில் உள்ள உறைகிணற்றில் இருந்து தண்ணீரை மோட்டார் மூலம் பம்ப் செய்து மேல்நிலைத்தொட்டியில் ஏற்றும் போது, ஏசி சிமெண்டு பைப்புகள் தண்ணீர் அழுத்தத்தை தாங்க முடியாமல் பழுதடைந்து ஆங்காங்கே வெடித்து விடுகின்றன. இதனால் அவ்வப்போது மோட்டார் பம்பினை இயக்கும் வகையில் தண்ணீரின் வேகத்தை குறைத்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு மேல்நிலைத் தொட்டிக்கு ஏற்றி வீடுகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. பழைய படி, இங்கிருந்து குடிநீரை முழுமையாக பயன்படுத்த வேண்டுமாயின் பழைய ஏசி சிமெண்டு பைப்புகளை மாற்றிட வேண்டும். இதற்காக அதிக செலவாகும். இதுகுறித்து ஆய்வு செய்து அரசிடம் அனுமதி பெற்றுத்தான் பழைய பைப்புகளை மாற்றிட முடியும், என்றனர்.

The post தேனி நகர் குடிநீர் தேவைக்காக பனசலாற்று குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Panasalatu ,Theni Nagar ,Theni ,Veerappa Aiyanar ,Allinagaram ,Banasalatu ,Dinakaran ,
× RELATED தேனி மாவட்டத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை